Share via:
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் தற்போது நிரபராதி என்று நிரூபிக்கும் வகையில் அவரது வழக்கறிஞர் சில விவரங்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் அரசு மருத்துவமனையில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் செமினார் அறையில் அரை நிர்வாணமாக உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், நான்தான் கொலை செய்தேன். என்னை தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று திமிராக வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சஞ்சய் ராய் நிரபராதி என்று நிரூபிக்கும் வகையில் அவரது வழக்கறிஞர் கவிதா சர்க்கார் சில விவரங்களை பல்வேறு ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, சஞ்சய் ராயிடம் உண்மை அறியும் சோதனையான பாலிகிராஃப் டெஸ்ட் நடத்தப்பட்ட போது, அவரிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் பெண் மருத்துவமரை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேட்டதற்கு, நீங்கள் கேட்பதே தவறு. நான் அவரை கொலை செய்யவே இல்லை என்றும், தான் செமினார் அறைக்குள் செல்லும் போதே அவர் சுயநினைவின்றி, உடல் முழுவதும் ரத்தம் படிந்தநிலையில் கிடந்ததாக தெரிவித்தார்.
அதை நீங்கள் ஏன் முன்பே தெரியப்படுத்தவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, அப்போது சஞ்சய் ராய் பயத்தில் இருந்ததாகவும், தான் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் நினைத்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சஞ்சய் ராய் எளிதாக செமினார் அறைக்குள் நுழைந்திருக்கிறார் என்றால், அங்கு பாதுகாப்பு குறைவு என்ற விஷயம் வேறு சிலருக்கும் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்திருக்கிறான் என்றும் கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.