Share via:
அரசு ஊழியர் மாற்றி
மாற்றிப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி சஸ்பெண்ட் உத்தரவு கொடுத்திருக்கிறார். அரசு
ஊழியர் செய்தால் தண்டனை, அரசியல்வாதிகளுக்குத் தண்டனை இல்லையா என்று அரசு ஊழியர்கள்
கொதித்து வருகிறார்கள்.
சிவகங்கையில் அமைச்சர்
உதயநிதி அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் புதர் மண்டி
கிடப்பதாக வந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தீர்களா என்று அந்த பகுதி பிடிஓ சோமதாஸிடம்
கேட்டார். அதற்கு சோமதாஸ், நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று பதில் சொன்னார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட
பகுதிக்கு அமைச்சர் உதயநிதி போன் செய்து விசாரித்தார். உண்மையில் அங்கு எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பது உறுதியானது. உடனே சோமதாஸ், ‘விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’
என்று மாற்றிப் பேசினார். இதற்காக அந்த அலுவலருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது.
உதயநிதியின் அதிரடி
நடவடிக்கையை தி.மு.க.வினர் பாராட்டித் தள்ளினார்கள். இப்படி நடவடிக்கை எடுத்தால் தான்
அதிகாரிகள் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்வார்கள் என்று உதயநிதிக்கு ஜே போட்டு வருகிறார்கள்.
அதேநேரம் அரசு அலுவலர்கள்,
‘அமைச்சர் திடீரென கேட்கும்போது பதட்டத்தில் மாற்றிப் பேசியிருக்கிறார். இதற்காக சஸ்பெண்ட்
என்பது ஓவர். மாற்றி மாற்றிப் பேசுவது என்றால் உதயநிதியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும், ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னார். இப்போது
ரகசியம் எதுவுமில்லை, மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறோம் என்கிறார்.. அவர்
மீது யார் நடவடிக்கை எடுப்பது?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு, ‘முதலில்
மாத சம்பளம் வாங்கும் நீங்கள் ஒழுங்காக வேலையைப் பாருங்கள், அப்புறம் அமைச்சர் மீது
குற்றம் சொல்லலாம்’ என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.