Share via:
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிறகு அவரது பெயர் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு என்றானது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே மகாவிஷ்ணு நிகழ்த்திய உரைகளை பலர் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்சில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். நான் இவரின் பின்தொடர்பவர் அல்ல என்றாலும் இவரின் சொற்பொழிவுகள் மனதை இலகுவாக்குகிறது என்று கேப்ஷனும் வைத்து வந்தனர்.
இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் முன்ஜென்மம், பாவம், புண்ணியம் என்று பல்வேறு தலைப்புகளில் பேசி மாணவிகளை கண்ணீர் சிந்த வைத்த வீடியோக்கள் வைரலானது. மேலும் மாற்றுத்திறனாளி ஆசிரியருடனான அவரது திமிர் பேச்சு பலரின் ரத்தத்தை கொதிக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து வெளிநாடு சென்று திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து அலேக்காக போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (செப்.11) விசாரணைக்கு வந்தது. மதியம் 12.15 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு மகாவிஷ்ணு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் அவரை போலீசார் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் ஜாமீன் கேட்டு மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி தனது ஜாமீன் மனுவை மகாவிஷ்ணு திரும்பப் பெற்றார்.