Share via:
மதுரை விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற தனியார் பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீயால் கரும்புகை வந்ததால், சரண்யா, பரிமளா என்ற 2 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு விடுதி உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விசாகா விடுதியை மூடுமாறு கடந்த வருடமே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விபத்து பகுதியை ஆய்வு செய்த மதுரை மாவட்ட சங்கீதா செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவர் பேசும்போது, இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும். மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிககளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். மதுரையில் பதிவு செய்யாத அனைத்து விடுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.