Share via:
டெல்லி முதல்வராக
அரவிந்த் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்துப் போடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு
போட்டிருப்பதால், புதிய முதல்வரை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த
போட்டியில் தன்னுடைய மனைவியை முன்னுறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொள்வது
கட்சிக்குள் மோதலை உருவாக்கியுள்ளது.
டெல்லி மாநில முதல்வரும்,
ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்
அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்துவந்தார்.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், அவர் சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால்
வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சி.பி.ஐ. வழக்கிலும்
அவருக்கு உச்சநீதிமன்றம், கோப்புகளில் கையெழுத்து இடக்கூடாது, முதல்வர் அலுவலகம் மற்றும்
தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து
கடந்த 13ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு பிறகு
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், தொண்டர்கள்
கூட்டத்துக்கு மத்தியில் உரையாற்றிய அர்விந்த் கெஜ்ரிவால், “முதல்வர் பதவியை ராஜினாமா
செய்கிறேன். டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதில் மக்கள் தீர்ப்பை
அறிவிக்கும் வரை, அந்த நாற்காலியில் அமர மாட்டேன். நிரபராதி என நிரூபிக்கும் வரை முதல்வர்
பதவியில் அமரப்போவதில்லை. நான் ராஜினாமா செய்த பிறகு கட்சியின் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக
நியமிக்கப்படுவார். அடுத்த சில நாட்களில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த
முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத்
தொடர்ந்து டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜூக்கு வாய்ப்பு
இருப்பதாக கூறப்பட்டு வந்தடு. மேலும் ஆத்மியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களுமான கைலாஷ்
கெலாட், கோபால் ராய் பெயர்களும் அடிபட்டன. ஆனால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை அடுத்த
முதலமைச்சராக்க கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை
பா.ஜ.க. வெளியிட்டு, ‘ஆம் ஆத்மியில் வேறு தலைவர்களே இல்லையா?’ என்று கேள்வியை எழுப்பி
கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
என்ன நடக்கிறது என்று
பார்க்கலாம்.