Share via:
ஒரே நேரத்தில் பெரியார்
பிறந்த நாளுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் கொடி பிடித்திருக்கும் விஜய்யின் அரசியல்
பாதை புரியாத புதிராக மாறியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஆக்டிவ் அரசியலில் விஜய்
இறங்கிவிட்டார். ஆனாலும், விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போவது குறித்து அவரது ரசிகர்கள்
கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்கள். வரும் அக்டோபர் 16ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. அதேநேரம், மாநாட்டுக்கு முன்னதாகவே மாவட்டச் செயலாளர்கள் பதவி நியமனம் நடக்கப்
போவதாக செய்திகள் வெளியாகின்றன.
விஜய் மாநாட்டில்
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் குறைந்தது 500 பேர் பங்கேற்க வேண்டும் என்று விஜய் நிபந்தனை
போட்டிருக்கிறார். இதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாவட்டச் செயலாளர்கள் போன்று பதவி
கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறப்பட்டதை அடுத்து, கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள்
தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே
234 தொகுதிக்கும் தனித்தனியே மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யலாம் என்று விஜய்க்கு
ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இது வரை எந்தக் கட்சியும் இப்படியொரு புரட்சி செய்ததில்லை
என்பதால் இத்தனை மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்தால் கூட்டத்தைக் கூட்டிவருவது எளிது
என்றும், அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை
பேரை நியமனம் செய்தால், இந்தக் கூட்டத்தில் தகுதி இல்லாத நபர்கள் நுழைந்துவிடக் கூடும்
என்றும், எடுத்த எடுப்பிலேயே தி.மு.க.வினர் விலை பேசி அழைத்துச்சென்று விடுவார்கள்
என்பதாலும் இந்த கோரிக்கையை விஜய் நிராகரித்துவிட்டார்.
அதனால் இப்போதைக்கு
40 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் நியமனம் செய்ய முடிவு எடுத்திருக்கிறாராம். பாராளுமன்றத்
தொகுதி அடிப்படையில் நியமனம் செய்துவிட்டு, அதன்பிறகு எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்த பணி முடிவடைந்த பிறகே மாநாட்டு தேதி அறிவிக்கப்படும்.
இந்த மாநாட்டில்
விஜய் மட்டுமே மேடையில் இருப்பாராம். இந்த மேடையில் சீமானுக்கு நேரடியாகப் பதில் கூற
இருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு பேட்டியிலும் தம்பி விஜய் தன்னிடம் வந்து கூட்டணி குறித்துப்
பேச வேண்டும் என்று சீமான் கூறிவருகிறார். இது விஜய்க்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
ஆகவே, இதற்கு கடுமையான பதில் தயாராகி வருகிறது. ஆளும் தி.மு.க.வுடன் மட்டுமின்றி சீமானுடன்
மோதுவதற்கும் விஜய் தயாராக இருக்கிறாராம். அப்போது தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையயும்
தன் பக்கம் திருப்ப முடியும் என்று திட்டமிடுகிறாராம்.
மாநாட்டில் அதிரடி
காத்திருக்கிறது.