Share via:
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சிறுமியின் வீட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒன்றரை நாட்கள் கழித்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் மனதை கதிகலங்கச் செய்தது. அதைத்தொடர்ந்து இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், மற்றொருவரிடம் இருந்து வாங்கிய துண்டுடன் தனது துண்டனை இணைத்து அங்கிருந்த கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சிறைக்காவலர்கள் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் விவேகானந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறைக்காவலர்கள் மற்றும் சககைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.