Share via:
கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்
சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஓர் அறிக்கை வெளியிட்டது. இதனை காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடுத்துக்கொண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால்,
அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது.
சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பம் கிளப்பியிருக்கிறது
ஹிண்டன்பர்க். அதானியின் வெளிநாட்டு
நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதாபி
பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும், பல்லாயிரக்கணக்கான
கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஆவணங்களை
வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’
நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு
எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதானி குழுமத்தின்
நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும்
சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டதாகவும் இருப்பதாக ஹிண்டன்பெர்க் கூறியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் அதானி குழுமம் மீதான
செபியின் விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஹிண்டன்பெர்க்
அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மாதாபி
பூரி புச் மற்றும் அவரது கணவர் கூட்டாக,
‘’எங்களுடைய வாழ்க்கை மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் திறந்த புத்தகம். கடந்த சில ஆண்டுகளாக
அனைத்து தேவையான தகவல்களும் செபியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழு
வெளிப்படைத்தன்மைக்காக, உரிய நேரத்தில் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
செபி அமைப்பு ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சிக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்தது. நோட்டீஸ்
ஒன்றும் அனுப்பியது. அதற்குப் பதிலாக, ஹிண்டன்பெர்க் செபியின் பெயருக்குக் களங்கம்
விளைவிக்க முயன்றுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹிண்டன்பெர்க்கின் புதிய அறிக்கையை அடுத்து, உடனடியாக இதனை நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
என காங்கிரஸ் கட்சி போர்க்குரல் எழுப்பியிருக்கிறது. மதாபி புச் பதவி விலகி விசாரணையை
எதிர்கொள்ள வேண்டும். செபி தலைவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவரும் அவரது
கணவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும், இன்டர்போலிலும்
லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட வேண்டும்” என திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருக்கிறது.
அதேநேரம், பா.ஜ.க.வின் மோடி அரசு இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வழக்கமாக
இது போன்ற குற்றச்சாட்டு எழும் நேரங்களில் எதிர்க் கட்சியினர் என்றால் பாய்ந்து பிடிக்கும்
சி.பி.ஐ., அமலாக்கத்துறையும் அமைதியாக இருக்கின்றன.
ஆகவே, பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்ட சித்ரா விவகாரத்தைப் போலவே இதுவும் அப்படியே
மூடி மறைக்கப்படும் என்றே தோன்றுகிறது.
.