Share via:
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோட தமிழக அரசின் சார்பில் கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் பேரிடர் மீட்புப்படையினர் மண்ணுக்குள் புதைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஆகஸ்டு 1) 3வது நாளாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியின் போது வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஆண் ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர். காயமடைந்துள்ள அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக வயநாடு எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன் சென்றிருந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு கார் மூலம் பயணித்தனர். முதல்கட்டமாக சூரல்மலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகளை பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து பேரிடர் மீட்புப்படையினரிடம் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மேம்பாடி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தனர். நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காண முடியாத சில சடலங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது சோகத்தின் உச்சம்.