Share via:
நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி நியாய விலைக்கடைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. பொருட்கள் எடை போடும்பொழுது அதில் மோசடி நடப்பதாக பல்வேறு நியாயவிலைக்கடை ஊழியர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன.
இவற்றை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு ரேஷன் கடையில் பாக்கெட்டுகளில் உணவுப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. அவற்றை பொதுமக்கள் திருப்தியுடன் வாங்கி செல்வதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இப்புதிய திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்காக உணவுப்பொருள் வழங்கல்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.