Share via:
2024- 2025ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23ம்தேதி) தாக்கல் செய்தார்.
சுமார் 80 நிமிடங்கள் கால அவகாச எடுத்து மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த இந்த அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. கூட்டணியில்லாத மாநிலங்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இந்த அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட் பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு கல்விக்கடன் தள்ளுபடி குறித்தும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதோடு புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 1 கோடியே 52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகள் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் அரிசி வழங்கும் திட்டம் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு தமிழ்நாட்டை மட்டும் அம்போவென்று விட்டுவிட்டது வேதனையின் உச்சம். இருப்பினும் ஆந்திராவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம்- சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை மட்டுமே தமிழ்நாட்டிற்கு பயன் அளிக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
இருப்பினும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தமிழகத்திற்கென்று எந்த தனிப்பட்ட அறிவிப்புகள் வெளியாகாமல் தனித்துவிடப்பட்டுள்ளது. இது பொருளாதார மற்றும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.