Share via:
கடந்த 35 நாட்களில் மட்டும் 89 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்
கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை. தமிழக எம்.பி.க்களும் குரல் கொடுக்கவில்லை என்பது கடலோர மாவட்டங்களில்
பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 பேர் கடந்த 2 நாட்களுக்கு
முன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து
விட்டு இன்று அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி
9 மீனவர்களையும் அவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு
அழைத்துச் சென்றுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 9 பேர்
கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
. வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம்
முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச்
சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம்
89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக
சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக மீனவர்களை
எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில்
அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில்
வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில்
வாடிக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய,
மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறது. மத்திய அமைச்சர்
ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்கிறார். ஆனால், எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. எனவே தமிழக எம்.பி.க்கள்
வெளியுறவுத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று
மீனவர்கள் விரும்புகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக நம் எம்.பி.க்கள் குரல் கொடுத்து
விடுதலை பெற்றுத்தரவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.