Share via:
வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முதல்கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்பது 44 சதவீதம் தகுதி அடிப்படையிலும், விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீதம் அடிப்படையிலும், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 10 சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதம் என்ற நிலையில் சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில் பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒதுக்கீட்டில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில ஈடுபட்டு தியாகிகள் குடும்பத்திற்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசை ரத்து செய்ய வைத்தனர்.
இந்த ரத்தை எதிர்த்து 2021ம் ஆண்டு டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தியது. இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வெடித்து போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசுக்கு எதிராக மாறியுள்ளது.
வங்காளதேசத்தில் 45 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களில் 8,500 பேர் மாணவர்கள் ஆவர். கலவரத்தில் பாதிக்காத வண்ணம் மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சாலை மார்க்கமாக இந்திய உயர் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் ஆகியவற்றின் துணையுடன் 778 மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். விமானங்கள் வாயிலாக 200 மாணவர்களும் தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ள மாணவர்களை பத்திரமாகவும் துரிதமாகவும் இந்தியா அழைத்து வரும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.