Share via:
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து கடந்த 20 நாட்களாக தொகுதி வாரியாக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை
நடத்தி வருகிறார்.
நேற்று திருப்பூர் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள்
ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரும் கூட்டணி குறித்து பேசினார்கள். அதற்குப்
பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நிர்வாகிகள் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கு
1 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். கடுமையாக உழைத்தால் மட்டுமே சட்டப்பேரவைத் தேர்தலில்
வெற்றி கிடைக்கும். அதற்கு கிராமம் கிராமமாகச் சென்று கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களைச்
சேர்க்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகளின்
பொறுப்புகள் பறிக்கப்படும்’’ என்று எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில், கடந்த 2021 தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்த
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு வியூகம் அமைக்க
இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் ஆரம்ப கட்டத்தில் சில ஆலோசனைகள் கூறியிருக்கிறார். அதன்படி, எடப்பாடி
பழனிசாமியே பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர். இதனை ஏற்றுக்கொண்டு சசிகலா, பன்னீர்செல்வம்
ஆகியோர் கட்சிக்குள் நுழையலாம். தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். தேர்தலில் நிற்கலாம்.
தேர்தலுக்குப் பிறகே கட்சிப் பணிகளில் பதவி கொடுக்கப்படும் என்று அறிவிக்கலாம்.
அதேபோல் பா.ம.க. கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, வேல்முருகனுக்கு
அதிக தொகுதிகள் கொடுத்து கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமியைக் கூட்டிவர
வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.
சீமானுடன் கூட்டணி சேரவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் ஒரு சில
தொகுதிகளில் சீமான் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம்.
அதேபோல் அவர்களும் தி.மு.க.வுக்கு கடுமையான போட்டி தரும் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த
வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளலாம். சரியான வேட்பாளர்களை நிறுத்தினால் 150 தொகுதிகள்
வெல்ல முடியும் என்று கணக்குப் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். .
இது குறித்து அடுத்தடுத்து இன்னும் இரண்டு மீட்டிங் நடைபெற இருக்கிறது.
அதன் பிறகே பிரசாந்த் கிஷோர் இறுதி செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது. தி.மு.க.வுக்கு
செம போட்டி காத்திருக்கிறது.