Share via:
பலரும் எதிர்பார்க்கப்பட்ட
ஆளுநர்கள் நியமனம் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
9 மாநிலங்களில் ஆளுநர் மாற்றத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார்.
அதன்படி, புதுச்சேரி
துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நியமிக்கப்பட்டுள்ள
கே.கைலாசநாதன் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும் ஓய்விற்கு
பின்னரும் 11 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இவரது
நியமனம் பலத்த எதிர்ப்பை இப்போதே பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநில
ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு
தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில
ஆளுநராகவும், சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகாவும், சி.எச்.விஜயசங்கர் மேகாலய ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட், தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்புகளை
வகித்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம்
மாநில ஆளுநராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் துணை
நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா அவர்கள் அசாம்
மாநில ஆளுநராகவும், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநில ஆளுநர்களும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இம்மாதம் 31ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
ஆகவே, அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகம் குறித்த எந்த
அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து ஆர்.என்.ரவியே தமிழக கவர்னராக நீடிப்பதற்கு
அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு
புரமோஷன் போன்று மகாராஷ்டிரா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ராதாகிருஷ்ணன் தனது
எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ‘குடியரசு தலைவர்
திரவுபதி முர்மு, பிரதமர் மோடி,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்
ஷா ஆகியோருக்கு என்
மனமார்ந்த நன்றி. புதிதாக மகாராஷ்டிர
மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை மிகவும் சிறப்பான
முறையில் மேற்கொள்வேன். என் கடைசி மூச்சு
இருக்கும் வரை இந்த நாட்டிற்காக
மிகவும் கடினமாக உழைப்பேன்’ என்று
கூறியிருக்கிறார்.