Share via:
கேரள நாட்டின் வயநாட்டில்
நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 300 மி.மீ. மழை பதிவானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று
அதிகாலை 1 மணியளவில் தொடங்கி
3 மணி வரையில் அடுத்தடுத்து நான்கு நிலச்சரிவு
ஏற்பட்டுள்ளது.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை
ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய
பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு
பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றாலும் மழையின் காரணமாக மீட்புப்பணியில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலப்புரம்,
நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு
ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்க
வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. முண்டக்காய் பகுதியில் பல
வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள்
புதைந்துள்ளன.
கண் இமைக்கும் நேரத்தில்
வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாலும், பலரும் தூக்கத்தில் இருந்த காரணத்தாலும் தப்பிக்க
முடியாத நிலை உருவாகியிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்டுள்ள
பகுதிக்கு செல்லும் பாலம் இடிந்து
அடித்து செல்லப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேலும்
சிக்கலாக்கியுள்ளது. பேரிடர் ஏற்பட்ட இடத்தில்
தற்காலிக பாலம் கட்டவும், ஹெலிகாப்டர்
மூலம் மக்களை வெளியேற்றவும் முதல்வர்
பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலச்சரிவில்
கிட்டத்தட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாகவும்,. தற்போது
வரை 50 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இன்னமும் அதிகமான
நபர்கள் நிலச்சரிவுக்குள் சிக்கியிருப்பதால் உயிர் இழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு
உள்ளது.
இதற்கிடையே நிலச்சரிவில்
சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக
வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரளத்துக்குத்
தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சித்
தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான
ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்திருக்கிறார். மீட்பு பணிகளை பார்வையிட
இன்று நேரில் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.