Share via:
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரேஷ் என்பவர் பொது நல மனு ஒன்று தொடுத்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விஷசாராயம் காய்ச்சிய மற்றும் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தின் எதிரொலியாக அம்மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசின் சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிவாரண உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். அதோடு எந்த ஆதாரமும் இன்றி, விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பொது நல வழக்கு தொடுத்த குமரேஷ் தனது மனுவில், மக்களின் வரிப்பணத்தை சட்ட விரோதமாக விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை தான் பல பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தனர்.