Share via:
தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பூரில்
பா.ஜக. மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த கூட்டத்தில்
அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து புதிய தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக
பாஜ தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 28ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னர்
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,
வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பூரில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன்,
சுதாகர் ரெட்டி ஆகியோருடன் அண்ணாமலையும் பங்கேற்று பேச உள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல
தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதிய தலைவர் குறித்தும், 2026 சட்டப்பேரவைத்
தேர்தலில் பாஜ தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட
இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜ தலைவராக அண்ணாமலை பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு
பெற்றுள்ள நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம்,
அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரை மாற்றிவிடக் கூடாது என்று ஒரு குழுவினர்
தீவிரமாக முயற்சி செய்துவருகிறார்கள். எப்படியும்
மாற்றியே தீர வேண்டும் என்று ஒரு குழுவினர் திட்டமிட்டு, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு
வருகிறார்கள்.