Share via:
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாகவும், காரில் கஞ்சா கடத்தியதாகவும் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் சவுக்கு சங்கர் கட்டம் கட்டப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கிடையில் சவுக்கு சங்கர் கைது செய்து அழைத்து வரப்பட்ட கார் விபத்துக்குள்ளானதும், அவரது கையில் மாவுக்கட்டு போட்டது என தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இதற்கிடையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கோவை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியிலும் சவுக்கு சங்கர், தன் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருவதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று குற்றம்சாட்டி கோஷம் எழுப்பியபடி சென்றார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பும் கூச்சலும் நிலவியது. இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.