Share via:
அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்று கருணாநிதி கொண்டுவந்த
அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு
தி.மு.க. உள் ஒதுக்கீட்டில் துரோகம் செய்கிறது என்று பொங்கியிருக்கிறார் ராமதாஸ்.
கட்ந்த 2009ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு,
பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு
வழங்கியது. 2008 நவம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர்
(தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.
அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்
கிருஷ்ணசாமி 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த
வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த ஜே.யசோதா 2015ஆம் ஆண்டு
மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா,
அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 2020 மார்ச் மாதம்
16-ஆம் தேதி இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், அருண் மிஸ்ரா தலைமையிலான
5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதைப்
போலவே, அந்த வகுப்பினரின் உட்பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கலாம்
என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். கூட்டாட்சி கட்டமைப்பில் இடஒதுக்கீடு பட்டியலில்
இடம்பெறும் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும்
மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த
விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்பதால் அதிக நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு இந்த
வழக்குகளை அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்தது. பட்டியலினத்தவர்களுக்கு
உள்இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும்கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்த 7 நீதிபதிகள்
கொண்ட அமர்வு, 2009ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த
அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ‘வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது
வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு
வழங்க மறுக்கிறது என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக
தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் கல்வி மற்றும்
வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில்
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022 ஆம் ஆண்டு மார்ச்
31 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023
ஆம் நாள் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.
ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த
அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள்,
6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப் பட்டது. ஒட்டுமொத்தமாக
வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11 ஆம் நாளுடன் முடிந்துவிட்டது. இப்போதும் அறிக்கை
தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவை நீட்டிப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருக்கும்
காரணங்களும், அதை எதிர்கேள்வி கேட்காமல் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதும் தான் வியப்பளிக்கிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சமூகங்களின் சாதிவாரி விவரங்கள்
இல்லாததால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க இயலவில்லை என்றும், அந்தப்
பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு காலக்கெடு தேவை என்று ஆணையம் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை
கவனமாக பரிசீலித்து காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதாகவும் தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக
அறிவித்த நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை;
மத்திய அரசும் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை.
இவை நடக்காத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு
நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும்
நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து
வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்