Share via:
மோடிக்கு 75 வயது
நெருங்குகிறது. பா.ஜ.க. கட்சி விதிகளின் படி 75 வயதுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்க
முடியாது. அதேநேரம், வேறு பதவியில் அவர்களை அமர்த்த முடியும். எனவே, மோடியை அடுத்து
இந்திய அதிபர் ஆக்கும் வகையிலே ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக
எதிர்க் கட்சிகள் கொதிக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல்களை ஒரு கட்டமாகவும் அது நடந்து முடிந்து 100 நாட்களுக்குள்ளாக உள்ளாட்சி
தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. அது குறித்து
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தேர்தல் காரணமாக ஏற்படும் அதிக செலவு குறைய
வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக்கூடாது. இன்றைய இந்தியாவும், இன்றைய இளைஞர்களும்
வளர்ச்சி விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சீர்திருத்தம்’’ என்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைக்கும்,
அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமா
என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. ஏனென்றால், இப்போது நாடாளுமன்றத் தேர்தலே பல
கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இப்போதுள்ள இ.வி.எம். இயந்திரங்களைப் போன்று
மூன்று மடங்குகள் வாங்க வேண்டியிருக்கும். அதோடு, மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்தை
முன்கூட்டியே நடத்துவது அல்லது காலம் தாழ்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக சட்டத்திருத்தம்
மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
குறிப்பாக அனைத்து
மாநிலங்களின் சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் கலைக்க முடியாது என்பதால், ‘ஒரே நாடு
ஒரே தேர்தல்’ நடைமுறை சாத்தியமாகாது என்றாலும் மோடிக்காக இதனை செய்வதற்கு பா.ஜ.க. பிடிவாதமாக
இருக்கிறது. பெரும்பான்மையாக இருந்திருந்தால் இது எளிதாக இருந்திருக்கலாம். இப்போது
மாநிலக் கட்சியின் பலத்திலே பா.ஜ.க. இயங்குவதால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்தாலும்
எப்படியாவது கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
அதனாலே பின்வாசல்
வழியாக இந்தியாவை அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று
கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர்,
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முழக்கம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும்,
ஜனநாயகத்தை அழித்துவிடும் இந்த திட்டம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தவும்,
மத்திய அரசுக்கு முழு அதிகாரம் செல்வதற்கும் வழிவகுக்கும் நாட்டின் ஜனநாயக அமைப்பை
சீர்குலைக்கும் சங்பரிவாரின் முயற்சிகளுக்கு எதிராக சமூகம் ஒன்று திரள வேண்டும்’ என்று
குரல் எழுப்பியிருக்கிறார்.
மோடியின் பிடிவாதம்
ஜெயிப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம்.