Share via:
கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் அனைத்து மாநில மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ம் தேதி அதிகாலை 1 மணியில் இருந்து 3 மணிவரை தொடர்ந்து 4 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அட்டமலை, வெள்ளரிமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய குக்கிராமங்களில் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்தது.
அதிகாலை நேரம் என்பதால், மக்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று (ஆகஸ்டு 5) 7வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக அங்குள்ள அரசு பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சேறு சகதியில் மூழ்கிப் போனதால் சடலங்கள் சேதமடைந்துள்ளதால் அடையாளம் காணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மிச்சம்மீதியாக உள்ள வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. யாரும் இல்லாமல் பூட்டப்பட்டுள்ள அந்த வீடுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். உயிருக்கு அஞ்சி வீட்டை அப்படியே பூட்டிவிட்டு சென்றவர்களின் உடமைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்று முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் தன்னார்வலர்கள் தங்களின் முழு விவரத்தையும் பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கும் அப்பகுதியில் எப்படித்தான் திருடர்களுக்கு கொள்ளையடிக்க மனம் வருகிறதோ என்று ஆதங்கத்தில் தவிக்கிறார்கள் நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்கள். உங்களுக்கும் அதே எண்ணம் தோன்றுகிறதா?