Share via:
’’எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ள
வேண்டும், பழைய அ.தி.மு.க.வாக வரவேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை’’ என்று உதயநிதி
பேசிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.
இதற்கு பதிலடியாக, தி.மு.க. உடையப் போகிறது என்று ஒரு தகவலை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது குறித்து அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’உதயநிதிக்கு
துணை முதல்வர் பதவி கொடுப்பதை தி.மு.க.வின் சீனியர்கள் யாருமே விரும்பவில்லை. தி.மு.க.
மூத்த நிர்வாகியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கும் துணிவு ஆர்.எஸ்.பாரதிக்கு
இருக்கிறதா… அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் குறித்துப் பேசாமல் துணை முதல்வர்
பற்றி பேசுகிறார்கள்’’ என்று பேசியிருக்கிறது.
இதையடுத்து அ.தி.முக.வின் ஐ.டி.விங், ‘’துரைமுருகன், நேரு தொடங்கி
தங்கம் தென்னரசு வரையிலும் அதிருப்தியில் இருக்கிறார்கள். உதயநிதி கைக்கு கட்சி போய்விட்டால்
முழுக்க முழுக்க அவரது ஆதரவாளர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்கப்படும், அடுத்த
அமைச்சரவையில் சீனியர்களுக்கு சில இடங்களே ஒதுக்கப்படும் என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள்.
ஆகவே, இப்போதைக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இதையும் மீறி பதவி கொடுத்தால் அடுத்து ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைத்து
தி.மு.க.வை உடைத்து சீனியர்கள் தனியே வந்து க.தி.மு.க. தொடங்க இருக்கிறார்கள். க.தி.மு.க.
என்றால் கலைஞர் தி.மு.க. என்று அர்த்தம். இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது
கனிமொழி தி.மு.க.. என்றும் சொல்லலாம். ஆகவே, வரும் தேர்தலுக்குள் தி.முக. உடைந்துவிடும்.
ஆட்சியைப் பிடிக்கப்போவது எடப்பாடி பழனிசாமிதான்’’ என்று அரசியல் அலப்பறை செய்துவருகிறார்கள்.
இந்த விவகாரத்திற்கு ஆர்.எஸ்.பாரதி, ‘’ உள்நோக்கத்துடன் சி.வி. சண்முகம் வெளியிட்ட கருத்து
என்ற வஞ்சகவளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்கள் எவரும் சிக்க மாட்டார்கள்.
அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு கழகத்தினுடைய மூத்த தலைவர்களே முன்மொழிகின்றனர்.
இந்த யதார்த்தம் எடுபிடிகளுக்கு புரிய வாய்ப்பில்லை’’ என்று விளாசியிருக்கிறார்.
இதுகுறித்து தி.மு.க.வினர், ‘’முதலில் எடப்பாடி அவரது கட்சியை
பார்த்துக்கொள்ளட்டும். அங்கிருந்து முக்கியமான சீனியர்கள் தி.மு.க.வில் சேர்வதற்கு
மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். அவரது கட்சியை உடைப்பதற்கு பா.ஜ.க.வும் தயாராக இருக்கிறது.
கூட்டணிக்கும் யாரும் வருவதாக இல்லை. எனவே, ஜோக் அடித்துக்கொண்டு இருக்காதீர்கள்’’
என்று கிண்டல் செய்கிறார்கள்.