Share via:
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா, சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், போலீசார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இன்று சென்னை அழைத்து வந்தனர். அப்போது நீலாங்கரை பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்பிக்க முயற்சி செய்ததால், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
உயிரிழந்த சீசிங்ராஜா மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஆயுதத்தடை சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிப்பது உள்ளிடட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சசீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறும்போது, ‘‘சீசிங் ராஜாவுக்கும் மறைந்த பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை ஆந்திர மாநிலத்தில் கைது செய்தோம். வேளச்சேரி காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டார். இந்த துப்பாக்கிசுடுதலில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. எனவே தற்காப்புக்காக சீசிங் ராஜாவை சுட்டத்தில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.