Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருமே
தி.மு.க. ஆதரவாளராக இருக்கும் நிலையில் மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு ஆதவ் அர்ஜுனாவை
மட்டும் பேச வைத்திருக்கிறா திருமாவளவன். அவரும், ’வரும் 2026 தேர்தலில் எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காது. சந்திரபாபு நாயுடு கூட்டணிக் கட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டது
போன்ற பெருந்தன்மை இங்கே இல்லை. வட மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல்
தி.மு.க.வால் ஜெயிக்கவே முடியாது’ என்று வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்து
விமர்சனம் வைத்துவருகிறார்கள். ‘’ஆதவ் அர்ஜுன் கட்சியில் சேர்ந்த உடனே கட்சியில் பெரிய
பதவி கொடுத்ததும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்காக எம்பி சீட் கேட்டது, பரிந்து
கொண்டு பேசியது எல்லாமே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது இருந்த மரியாதையை குறைத்துவிட்டது.
காசு செலவு பண்ணினா யாராக இருந்தாலும் அந்த கட்சியில் சீட் வாங்கலாம் என்றால் அப்புறம்
எப்படி அவர்கள் கொள்கையின் பின் நிற்பார்கள்? 100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்
என்று சொல்லப்படுவதாலே திருமாவளவன் அமைதி காக்கிறாரா..?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு ’’திருமாவின் அட்மின் ஆக ஆதவ் அர்ஜுனா இருந்துவருகிறார்.
இவருடைய தவறான வழிகாட்டுதல் காரணமாகவே தாழ்த்தப்பட்டவர்கள் உள் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு
தெரிவித்து கேஸ் போட்டது. மதுவிலக்கு கொள்கையில் தேவையில்லாமல் மாநாடு நடத்துவதாக சீன்
போடுகிறார்கள். இன்னும் இவரை நம்பிக்கொண்டு இருந்தால் விசிகவின் எதிர்காலம் அம்புட்டுத்தான்’’
என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனுக்கு பதில் சொல்வதற்கு ஆ.ராசா போதும் என்று அவரை வைத்து
கண்டனம் செய்ய வைத்திருக்கும் தி.மு.க. ‘இந்த விஷயத்தில் திருமாவளவன் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளது.
இது மட்டும் போதாது என்று ரவிக்குமார் எம்.பியையும் களம் இறக்கியிருக்கிறது.
அவரும், “உண்மைக்கு புறம்பானது, அரசியல் முதிர்ச்சியற்றது. திமுகவுடன் கூட்டணி இருந்ததால்
தான் இரண்டு எம்.பி நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விசிக பெற முடிந்தது.” என்று பேசியிருக்கிறார்.
சிந்தனைச்செல்வனும் இதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.
திருமாவளவன் இன்னமும் அமைதி காப்பதைப் பார்க்கும்போது கூட்டணி
மாற்றம் உறுதி என்கிறார்கள்.