Share via:
திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றும்படி தெரிவித்துள்ளனர்.
காசுக்கடவுளான திருப்பதியில் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பல்வேறு தகவல்களால் பக்தர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நற்பெயரை குலைக்கும் விதத்தில் சந்திரபாபு நாயுடு பொய்யாக குற்றம்சாட்டுகிறார் என்று பதில் அளித்துள்ளார். இதத்தொடர்ந்து விரிவான ஆய்வு அறிக்கையை அளிக்குபடி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, திருப்பதி கோவிலை சுத்தப்படுத்தி, பரிகார பூஜை, சாந்தி யாகம் இன்று நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரை, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெளித்து தோஷ நிவர்த்தி செய்ய தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
இந்நிலையில் தோஷம் நீங்க பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இன்று (செப்.23) மாலை 6 மணியளவில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் விளக்கேற்றிய பிறகு ஓம் நமோ நாராயணாய என்ற மத்திரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.