Share via:
தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதில் இருந்து என்று கேட்டால், ஆதவ் அர்ஜூனன் எப்போது வி.சி.க.வில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதில் இருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக இருந்த நிலையில், சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி வி.சி.க.வும் சில உள்குத்து வேலைகளை செய்தது. இப்போது மறுபடியும் ஒரு முக்கிய சர்ச்சையான விஷயத்தில் ஆதவ் அர்ஜூனனை பேசவைத்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வேடிக்கை பார்க்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரத்தக்கொதிப்பில் உள்ளார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) இந்திய விமானப்படை சார்பில் நடைபெற்ற விமானப்படை சாகசத்தை 15 லட்சம் பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் மற்றும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உயிரிழப்புக்கு தமிழக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க.வும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முவைத்துள்ளது. வி.சி.க.வின் துணைப்பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜூனன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், கொளுத்தும் வெயிலில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடும் போது அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன் காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளது. இது அறிவியல் யதார்த்தம். இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு முன்னேற்பாடுகளை செய்த பிறகே தமிழக அரசு இந்த நிகழ்விற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.
குடிநீர், முதல் உதவி சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் சரியான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேவையான அமைச்சர்களோ, அதிகாரிகளோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவனிக்க முடக்கவிடல்லை என்பது மக்களின் குமுறலாக இருக்கிறது என்று ஆதவ் அர்ஜூனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிக்குள்ள இருந்து கொண்டே ஆதவ் அர்ஜூனனை பேசவைத்து தொல்.திருமாவளவன் வேடிக்கை பார்க்கிறார் என்று தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் புகைந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.