Share via:
ஒரே ஒரு நாள் 6 செ.மீ. மழைக்கே தண்ணீர் வெள்ளமாக நிற்கிறது என்பதால்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார். அதற்கு துணை முதல்வர்
உதயநிதி, ‘’மழை நீர் எங்கேயும் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை’ என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப் ஆகிறார் என்ற வில்லங்கம் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’மழை நீர் தேங்காத வகையில்
4000 கோடிக்கு திட்டங்களை வகுத்த அரசு, அதை முறையாக செய்ததா என்பதை வெளிக்காட்ட தான்
வெள்ளை அறிக்கை தேவைப்படுகிறது. நேற்று பிற்பகல் முதல் சென்னையில் மழை இல்லை என்கிற
போதும், மோட்டார் மூலம் தான் மழை நீரை பல இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் நள்ளிரவில்
அகற்றினார்கள். மோட்டார் மூலம் மழை நீரை அகற்றுவதும், படகுகள் மூலம் மக்களை இடம்பெயர
வைப்பதும் தான் அந்த 4000 கோடி திட்டமா என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.
போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி ஊழியர்களும் நள்ளிரவில்
செய்த சிறப்பான பணிகளால், மழை நீரை பல முக்கிய சாலைகளில் இருந்து நீக்க முடிந்துள்ளது
என்றாலும் கூட, உட்புறச் சாலைகளில் மழை நீர் வடியாமலேயே இருக்கிறது. பிரதான சாலைகளில்
மழை நீரை நீக்கிவிட்டு, சென்னையில் மழை நீர் முழுமையாக வடிந்துவிட்டது என்று சொல்வது
எந்த வகையிலும் சரியாக இருக்காது.
இன்று அதில் சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் நீக்கப்பட்டு இருக்கிறது.
மழை இல்லாததால், இதை செய்ய முடிந்தது. ஒருவேளை மழை தொடர்ந்திருந்தால்? வேறு திட்டங்கள்
இல்லாமல் அரசு பயணிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் தான், 4000 கோடி திட்டம்
என்ன? என்னென்ன திட்டங்களை எல்லாம் அதில் அரசு முடித்திருக்கிறது? என்பதை வெள்ளை அறிக்கையாகக்
கொடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
கணக்கு காட்டுவதில் என்ன பிரச்னை துணை முதல்வரே..?