Share via:
கடந்த 38 நாட்களாக நடந்துவந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டு, இன்று முதல் வேலைக்குத் திரும்புகிறார்கள். ஒன்பது முறைகளுக்கு மேல்
நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின்
அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
சங்கத்திற்கு இன்னமும் சாம்சங் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் போராட்டம் முடிவுக்கு
வந்திருப்பது உண்மையான வெற்றியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா
தொழிற்சாலையில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சி.ஐ.டி.யு
சார்பில் சங்கம் தொடங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி போராட்டம்
தொடங்கப்பட்டது. இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
முதலில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை
நடந்தது. அப்போது, ‘ஊதிய உயர்வு உள்பட தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சி.ஐ.டி.யு
உடன் சாம்சங் இந்தியா நிர்வாகம் பேச வேண்டும்’ என தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட
கோரிக்கையை ஏற்க நிர்வாகம் மறுத்தது. அதோடு, சங்கத்தின் பெயரில் ‘சாம்சங்’ எனப் பெயர்
வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
அடுத்து அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா
ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில்
14 கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அறிவித்தார். ஆனால், சி.ஐ.டி.யு தலைவர் முத்துக்குமார், “நிறுவனத்துக்கு வேண்டிய தொழிலாளர்களுடன்
ஒப்பந்தம் போட்டுவிட்டு அமைச்சர்கள் நாடகம் ஆடுகின்றனர்,” என்றார்.
இதன்பிறகு போராட்டம் நீடித்ததால் போராட்டப் பந்தல் அகற்றம், தொழிலாளர்கள்
மீது வழக்குப் பதிவு, நள்ளிரவுக் கைது எனப் பதற்றம் நீடித்தது. திருமாவளவன், சீமான்
போன்றவர்கள் நேரடியாக களத்துக்கு வந்து ஆதரவு கொடுக்கவே, பெரும் பிரச்னையாக மாறியது.
எனவே, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்பட நான்கு அமைச்சர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து,
“தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பை
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்,” என்ற அமைச்சர் எ.வ.வேலு உடன்பாடு எட்டப்பட்டதாகத்
தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினும் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்.
இதையடுத்து சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம்
நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர். இதன்பின்னர்,
போராட்டம் முடிவுக்கு வருவதாக அ.சவுந்தரராஜன் அறிவித்ததை அடுத்து மீண்டும் வேலைக்குத்
திரும்புகிறார்கள். சங்கம் வைப்பதற்கு அனுமதி பெறாத நிலையில் போராட்டத்தை முடித்துக்கொள்வது
என்றால் முன்னரே முடித்திருக்கலாம். ஏனென்றால் மற்ற கோரிக்கைகள் எல்லாம் முன்னரே ஏற்கப்பட்டுவிட்டன.
எனவே, இத்தனை நாட்கள் இழுத்தடித்து தேவையில்லாமல் பஞ்சாயத்துகள் நடந்து, பின் வாங்கியது
தோல்வி என்றே கருதப்படுகிறது.
அதேநேரம் சி.ஐ.டி.யு. தரப்பினர், ‘’யாரோடு பேச வேண்டும் என்று
தெரியாமல் தவித்த தொழில்துறை அமைச்சருக்கு சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்துடன் தான்
பேச வேண்டும் என்று புரிய வைத்து இருக்கிறது. யாருக்கும் சேதாரம் இன்றி தொழிலாளர்கள்
உரிமை பாதுகாக்கப்பட்டதோடு, சங்கத்தையும் பாதுகாத்து, இன்று சாம்சங் இந்தியா தொழிலாளர்
சங்கத்தினர் வெற்றியை பெற்று இருக்கிறார்கள்! வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது
புரிவதற்கு கடினம். இன்னும் மிச்சம் இருப்பது சங்கப் பதிவு. அந்த சங்கப் பதிவும்,சட்டத்தின்
வழியில் சாதிக்கப்படும்!! தொழிலாளர் உரிமை என்று எடுக்கப்படும்’’ என்கிறார்கள்.
பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்.