Share via:
தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சந்திரசூட் வரும் நவம்பர்
10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நடைமுறையின்படி, அவருக்குப் பின் அவருடைய
பதவிக்கு வருபவர் பெயரைக் குறிப்பிடுமாறு அரசாங்கம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது.
அதன் படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை தனக்குப்
பின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மத்திய
சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
நீதிபதி சஞ்சீவ் கண்ணா 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப்
பதிவு செய்தார். ஆரம்பத்தில் தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக
வாதாடினார், பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராக
பணியாற்றினார். வருமான வரித் துறையின் மூத்த நிலை ஆலோசகராக நீண்ட காலம் பணியாற்றிய
சஞ்சீவ் கண்ணா, 2004 ஆம் ஆண்டு டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்திற்கான நிலையான ஆலோசகராக
(சிவில்) நியமிக்கப்பட்டார்.
சஞ்சீவ் கண்ணா கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், அமிகஸ் கியூரியாகவும்
பல குற்ற வழக்குகளில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார். 2005ல் டெல்லி
உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டு, 2006ல் நிரந்தர நீதிபதியாக
நியமிக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா
டெல்லி நீதித்துறை அகாடமி, டெல்லி சர்வதேச நடுவர் மையம் மற்றும் மாவட்ட நீதிமன்ற மத்தியஸ்த
மையங்களின் தலைவர்/நீதிபதியாக பதவி வகித்தார்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜனவரி 18, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதியாக உயர்த்தப்பட்டார். எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆவதற்கு
முன்பே உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட சிலரில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர்.
சஞ்சீவ் கண்ணா ஜூன் 17, 2023 முதல் டிசம்பர் 25, 2023 வரை உச்ச நீதிமன்ற சட்டப் பணிக்
குழுவின் தலைவராகப் பதவி வகித்து, தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத்
தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் நிர்வாக குழு ஆலோசகராகவும்
உள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி சஞ்சீவ் கண்ணா பல முக்கிய தீர்ப்புகளில்
ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்திற்கான அனுமதியை எதிர்த்து
தொடரப்பட்ட மனுக்களைக் கையாளும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக இருந்த
நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். பா.ஜ.க.
அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தது ஜம்மு காஷ்மீரில் அரசியல் சட்டப்
பிரிவு 370-யை ரத்து செய்தது உள்ளிட்ட மிக முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் இருந்த
சட்டத்துறையில் 40 ஆண்டு அனுபவம் பெற்ற சஞ்சீவ் கண்ணா அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்