Share via:
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி
பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப்
போனது குறித்து கேட்டநேரத்தில், ‘சசிகலாவை மட்டுமாவது கட்சியில் சேர்க்க வேண்டும்’
என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், சசிகலா மீண்டும் சுற்றுப்பயண பாலிடிக்ஸை தொடங்கியிருக்கிறார்.
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒப்படைத்துவிடுவார் என்று
கணக்குப் போட்டார். அப்படி நடக்கவில்லை என்றதும் ஆன்மிக டூர் கிளம்பினார். அந்தந்த
பகுதிக்குச் செல்லும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் தேடிவந்து இணைவார்கள் என்று கணக்குப்
போட்டார் அதுவும் நடக்கவில்லை.
2021 சட்டப்பேரவையில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, திடீரென அறிவிப்பை வெளியிட்டு, இதன் மூலம் எடப்பாடி
பழனிசாமியின் மனதில் இடம் பிடிக்க நினைத்தார். அதுவும் நடக்கவில்லை.
அதன் பிரகு தொடர்ந்து மூன்று முறை சுற்றுப்பயணம் நடத்தி தொண்டர்களையும்
தலைவர்களையும் ஒருங்கிணைக்க எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்நிலையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக, வரலாற்றில் இதுவரை இல்லாத
வகையில் 7 இடங்களில் டெபாசிட் இழந்து, 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, அ.தி.மு.க.வில் தனது ரீ என்ட்ரீ தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா
தடாலடியாக அறிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்பினார். அதுவும் செல்லுபடியாகவில்லை
என்பதால் இப்போது, ’அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில், இரண்டாவது முறையாக
வி.கே.சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதலாவதாக, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி, பேரூராட்சி,
நகராட்சி, கிராமப்புறம், ஊராட்சிப் பகுதிகள் அனைத்து இடங்களுக்கும் சென்று தொண்டர்களை
சந்திக்கிறார். இதன் மூலம் மாற்றம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்.
இந்த நிலையில் சசிகலாவை மட்டுமாவது கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள்
என்று அ.தி.மு.க.வின் மூத்த புள்ளிகளின் கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவே
இல்லை. ராமநாதபுரம் நிர்வாகிகளுக்கும் நோ சொல்லிவிட்டார். ஆகவே, சசிகலாவின் பயணம் மீண்டும்
ஒரு முறை தோல்வியில் முடியப் போகிறது.