Share via:
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 8ம்தேதி) திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக புதிய ஆணையராக ஏ.டி.ஜி.பி. அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக முதலில் 8 பேர் பின்னர் 3 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் சென்னையில் மக்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தமிழிசை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் தி.மு.க. அரசின் செயல்பாட்டையும் விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோரை அதிரடியாக தமிழக அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு மாற்றாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அருண், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணியிடமாற்றத்தை தொடர்ந்து புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள அருண் ஐ.பி.எஸ். யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த அவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் ஐ.பி.எஸ். தேர்வை 1988ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உடனேயே, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.
அதன் பின்னர் கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், சென்னை அண்ணாநகர் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட இடங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படி பல்வேறு மாவட்டங்களில் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்ட அருண், தான் பணியாற்றிய இடங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி அவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பேரில்தான் தற்போது அவர் சென்னையில் அதிகரித்துள்ள கூலிப்படையினர் மற்றும் அவர்களின் தலைவர்களின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்க அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் உயர் மட்ட வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அருண் ஐ.பி.எஸ். தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளது ரவுடிகளுக்கு தற்போது பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எள்ளளவும் சந்தேகமில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை சென்னை மக்கள் உற்றுநோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.