Share via:
Cதமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு என்று அறிவுரை கூறியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான கொலையாளிகள் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து மேலும் 3 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்தனர்.
இதற்கிடையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அருண் ஐ.பி.எஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்
* செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.
* புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை
* தஞ்சாவூர் மங்களாபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை
உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் இனிமேல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. எனவே காவல்துறை அதிகாரிகளாகிய நீங்கள் மக்கள் பணியில் உள்ளதால் சட்டம் ஒழுங்கை காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதியான நிலையில், மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என்று தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்