Share via:
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத்தில் முதல் நபராக அங்கே சென்றது
மட்டுமின்றி, ‘இப்போது சரண் அடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்று ஆளும் தி.மு.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்தவர்
திருமாவளவன்.
கூட்டணிக் கட்சித் தலைவரே பொய்யான நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக
வாக்குமூலம் கொடுத்த பிறகே தி.மு.க. மீது அனைத்துக் கட்சிகளும் அவதூறு பரப்பின. ஆகவே,
இந்த விஷயத்தில் திருமா மீது தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள்
கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை
தொடர்பான வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று நேரில் வலியுறுத்தியதாகத்
தெரிகிறது. அதோடு நீட், மீனவர் கைது உள்ளிட்ட விஷயங்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை
நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும்
என்றும் கோரிக்கை வைத்திருக்கிறாராம். குறிப்பாக ஜாதிக் கட்சித் தலைவர்கள், சீமான்
உள்ளிட்டவர்களுக்கும் பாதுகாப்பு தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாராம்.
சாதிய, மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்துக்
கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அனைத்தையும்
கேட்டுக்கொண்ட ஸ்டாலின் எந்த ஒரு முடிவும் சொல்லவில்லை என்கிறார்கள். வெளிநாட்டுப்
பயணத்துக்கு ஸ்டாலின் திட்டமிட்டு வருவதால், இப்போதைக்கு திருமாவின் கோரிக்கை நிறைவேற
வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.