Share via:
இடைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறுவதைப் பார்த்து அதிர்ந்து
போயிருக்கும் அ.தி.மு.க.வினர், புத்திசாலித்தனமாக எடப்பாடி பழனிசாமி போட்டி போடாமல்
தவிர்த்தார் என்று பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க் புள்ளிகள், ‘’பக்கத்து
மாவட்டமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலங்களை கேட்டபின்பும், தேசியக் கட்சியின்
மாநிலத்தலைவரின் படுகொலை தலைநகரிலேயே நடந்தபின்பும், பல்வேறு கடத்தல், கொலை, கொள்ளை
என சட்டம் ஒழுங்கற்ற அவலங்களை பார்த்த பின்பும் , ஒழுங்கில்லாத சாலைகள் ,ஓடாத பேருந்துகள்,
முற்றிலும் இல்லாத நிர்வாகம் என்பதை அனுபவித்த பின்பும் மக்களை மிரட்டி, மக்களை பட்டியில்
அடைத்து , சுற்றுலா கூட்டி சென்று, இந்த அலங்கோல விடியா திமுக ஆட்சியில் இடைத்தேர்தல்களின்
முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை அன்றே கணித்த அரசியல் சாணக்கியர் புரட்சித்தமிழர்
எடப்பாடியார்’’ என்று பாராட்டி வருகிறார்கள்.
அதேநேரம், ஒருங்கிணைப்புக் குழுவினர், ‘’எடப்பாடி பழனிசாமிக்கு
மக்களிடம் எந்த செல்வாக்கும் இல்லை என்பதையே இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது. எடப்பாடி
பழனிசாமி விரும்பியபடி, அதிமுக வாக்குகள் எதுவும் நா.த.க-வுக்கும் பா.ம.க-வுக்கும்
போகவில்லை. அவர் வேண்டுகோள் விடுத்தபடி தேர்தலையும் யாரும் புறக்கணிக்கவில்லை.
அதேநேரம் விக்கிரவாண்டியில் 40%ஆக இருந்து திமுக வாக்கு 65%ஆக
உயர்ந்துள்ளது. அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களிக்கிற சூழ்நிலை
இன்று ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இப்பொழுதாவது ஒன்று
பட்ட அதிமுகவின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்கள்.
அதேநேரம் அ.தி.மு.க. நிர்வாகிகள், ‘’வலுவான கூட்டணி அமைப்பது என்றால்
நிச்சயம் பா.ம.க.வும் நாம் தமிழர் சீமானும் நம்முடன் இருக்க வேண்டும். இரண்டு பேரையும்
கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றால் நம்மால் நிச்சயம் வெற்றிபெற முடியாது’’ என்று சொல்லிவருகிறார்கள்.
‘’இன்னொரு தோல்வியில் இருந்து தப்பித்துவிட்ட எடப்பாடி பழனிசாமியை
அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் சொல்வது ரொம்பவே அவமானம். ஜஸ்ட் எஸ்கேப் ஆகியிருக்கிறார்
அவ்வளவுதான்’’ என்று தி.மு.க.வினர் சிரிக்கிறார்கள்.
பா.ஜ.க.வுடன் பா.மக.வை பிரிப்பதும் தனித்து நிற்கும் சீமானை கூட்டணிக்குள்
இழுப்பதும் அத்தனை எளிதான காரியமல்ல, என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?