Share via:
நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக இணையத்தில் செய்தி தீயாக பரவி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று 3வது நாளாக நடைபெற்றது.
கடந்த 10ம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி முதல் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்டபட்ட சென்னை மாநகர நிர்வாகிகள் கந்து கொண்டனர். 2வது நாள் (ஜூலை 11) கூட்டத்தில் சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற 3வது நாள் கூட்டத்தில் அரக்கோணம் மற்றும் தஞ்சை நிர்வாகிகள் கலந்து கொண்டனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரின் பெரும்பாலானவர்களின் கோரிக்கை அ.தி.மு.க.வின் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்ததுதான். அதன்படி யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவரும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக தெரிகிறது. அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரையில் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்று அப்பகுதி நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அவசர அறிவிப்பில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு அ.தி.மு.க.வில் என்றுமே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.