Share via:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேதாளம் போன்றவர். அவர் இப்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் ஜெயக்குமார் பேசினார்.
அவர் பேசும்போது, சுதந்திரப் போராட்ட வீரர் முத்துக்கோனின் தியாகம் குறித்தும் தேசப்பற்று குறித்தும் புகழ்ந்து பேசினார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். கட்சி தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது. டி.டி.வி. தினகரன் இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வம் கிடையாது. அவர் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி இணைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசும்போது, அண்ணாமலை என்கிற வேதாளம் எங்களை (அ.தி.மு.க.)விட்டு விட்டு தற்போது செல்வப்பெருந்தகை மீது ஏறி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் விஷச்சாராய மரணம் குறித்தும், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்தும் அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.