Share via:
சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோ எப்படி வெளியே போனது என்று கேள்வி எழுப்பியிருக்கும் இடும்பாவனம் கார்த்திக்கு, எக்கச்சக்க எதிர்க்கேள்விகள் கேட்கப்படவே, நாம் தமிழர் தம்பிகள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.
இடும்பாவனம் கார்த்தியின் பதிவில், ‘’பல காலமாக அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் உலவிய ஒரு பாடலை அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் பாடியதற்கு சாதிய உள்நோக்கம் கற்பித்து, அவரைக் கைதுசெய்து, சிறையிலடைக்க முற்பட்டது திமுக அரசு. நாம் தமிழர் கட்சி சார்பில், அண்ணன் மணிசெந்தில் அவர்கள் நீதிபதியிடம் வாதாடி நியாயத்தை நிலைநாட்டவே, சிறையில் அடைக்க மறுத்து விடுவித்தார் நீதிபதி.
முன்னதாக, அண்ணன் துரைமுருகனைக் கைதுசெய்து அவரது சொந்த வாகனத்திலேயே விதிகளுக்கு மாறாகக் கொண்டு வந்தார்கள் காவல்துறையினர். இதுமட்டுமல்லாது, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி, அச்சுறுத்தலை விளைவிக்கவும் செய்தார்கள். காவல்துறை வாகனத்தில் ஏற்றாமல் அண்ணன் துரைமுருகனின் சொந்த வாகனத்தில் ஏற்றியது விதிமீறல்; அதுமட்டுமல்லாது, வழக்குக்கு எவ்விதத் தொடர்புமில்லாதபோதும் அவரது அலைபேசிகள் பறிக்கப்பட்டு, இப்போதுவரை அவைத் திரும்ப வழங்கப்படவில்லை.
கடந்த முறை கைதுசெய்யப்பட்டபோது காவல்துறை எடுத்துக்கொண்ட அலைபேசியும் இன்னும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அதிலுள்ள தனிப்பட்ட உரையாடல்கள் திமுகவின் இணையக் கைக்கூலிகளால் வெளியிடப்பட்டது. அதேபோல, இந்த முறையும் செய்கிறார்கள். அலைபேசிகளைக் கேட்டால், நீதிமன்றத்தில் மனு போட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் காவல்துறையினர். அப்படியென்றால், அலைபேசிகள் காவல்துறையின் வசம்தானே இருக்கின்றன. அந்த அலைபேசியிலுள்ள தனிப்பட்ட உரையாடல்கள் திருச்சி சூரியா என்பவனுக்கு எப்படி கிடைத்தது? காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அலைபேசியிலுள்ள உரையாடல்களை எடுத்து, இணையத்தில் பரப்புவது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’ஓசியில் விஸ்கி வாங்கிக் குடிக்கும் அளவுக்கு துரைமுருகனுக்கும் பா.ஜ.க.வின் சூர்யாவுக்கும் அப்படி என்ன தொடர்பு? பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது என்று சீமான் ஏன் உத்தரவு போடுகிறார்? நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் எதற்காக பா.ஜ.க. தலைவருக்கு கமிட்மெண்ட் கொடுக்கிறார்?’’ என்றெல்லாம் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.
அதானே, கட்சிக்குள் என்ன தான் நடக்கிறது என்று நாம் தமிழர் தமிழர்கள் வேதனைப்படுகிறார்கள்.