Share via:
கர்நாடக அரசுக்கு இருக்கும் துணிச்சல் தமிழ்நாட்டுக்கு இல்லை,
தமிழகத்திலும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே இடம் என்று சட்டம் இயற்ற வேண்டும்
என்று அன்புமணி ராமதாஸ் குரல் கொடுக்கும் வேளையில், இந்த சட்டத்தைக் கொண்டுவந்த சித்தராமையா,
உடனடியாக இதை வாபஸ் வாங்கியது மட்டுமின்றி கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்.
தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும்
சட்டம் இரண்டு நாட்கள் முன்பு கர்நாடகா அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருந்தது. மேனேஜர்களுக்கான
இடங்களில் 50% மற்றும் இதர இடங்களில் 70% கன்னடியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்
என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
கன்னடியர் என்றால் அவர் கர்நாடகாவில் பிறந்திருக்க வேண்டும். குறைந்த
பட்சம் 15 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்திருக்க வேண்டும். கன்னடம் எழுதப் படிக்கப்
பேசத் தெரிந்திருக்க வேண்டும். தனியார் வேலைகளுக்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்படும்
கன்னடத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், போன்றவை முக்கியமான நிபந்தனைகள்.
ஆனால், இந்த அறிவிப்பு பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனங்களிடையே
பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த எதிர்ப்புகளின் விளைவாக இந்த சட்டம் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்படும் எனவும் ஷரத்துகள் மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்றும்
முதல்வர் சித்தராமையா பின்வாங்கிவிட்டார்.
ஏனென்றால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெங்களூருவில் பாதி
ஐடி நிறுவனங்கள் வெளியேறி விடுவார்கள். பெங்களூரு வாழ்வதே கார்ப்பரேட் மற்றும் ஐ.டி.
நிறுவனங்களால் தான். அந்த நிறுவனங்களில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் மற்ற
மாநிலத்தவரே பணியில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே
அனுப்ப நிர்வாகம் விரும்பாது. இந்த நிறுவனங்களை நம்பி லட்ச்கணக்கான குடும்பத்தினர்
இங்கு வந்து வசிக்கிறார்கள். அவர்கள் வெளியேறும் பட்சத்தில் கர்நாடகாவே காலியாகிவிடும்.
ஆகவே, இது முட்டாள்தனமான அறிவிப்பு. அதனாலே எதிர்ப்பைக் கண்டதும்
சட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இனிமேல் அதைத் தொடவே மாட்டார்கள்.
ஏனென்றால், மிகவும் பிற்போக்குத்தனமான,
குறுகிய மனப்பான்மை கொண்ட, நடைமுறைத் தெளிவு கொஞ்சமும் இல்லாத சட்டம் இது. இது முதல்வர்
சித்தாராமையாவுக்கும் கர்நாடக அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கிக் கொடுத்துள்ளது. இதே
போன்று தமிழகமும் அவப்பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டே அன்புமணி தூண்டிவிடுகிறார்
என்று திமு.க.வினர் சமூகவலைதளங்களில் அவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்