Share via:
கடந்த 5ம் தேதி சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட
ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட
8 பேர் காவல் துறையில் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்
மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பலரும் குரல்
கொடுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட ரவுடி திருவேங்கடம் கடந்த
14ம் தேதி சென்னை மாதவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார். அதோடு அவர் கொலை செய்யும்
வீடியோ காட்சிகளும் வெளியாகின.
இதையடுத்து மற்ற 10 பேரிடமும் ஆம்ஸ்ட்ராங் கொலை எதற்காக நடந்தது,
கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், கொலையில் கூலிப் படையினருக்கு எவ்வளவு பணம்
கைமாறியது உள்ளிட்டவை தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியான சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த பெண்
வழக்கறிஞர் மலர்கொடியை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இவர் அ.தி.மு.க.
நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின்
மைத்துனரான வழக்கறிஞர் அருள் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் மலர்கொடியுடன் தொடர்ச்சியாக
பேசியது தெரியவந்துள்ளது. இவரது வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை
நடந்துள்ளதால், விசாரணை நடத்திய போலீசார், கைது செய்துள்ளனர். மலர்கொடி மீது ஏற்கனவே
சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
‘’கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து
கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி
கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி சேகர் இன்று முதல் கழகத்தின்
அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக
அறிவித்துள்ளார்…’’ என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது இதே வழக்கில் ஹரிகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒரு முக்கிய பா.ஜ.க. புள்ளியான அஞ்சலை சிக்கப்போவதாக
சொல்லப்படுகிறது.
சிபிஐ விசாரணை கேட்டு பா.ஜக.வும் அ.திமு.க.வும் தொடர்ந்து நெருக்கடி
கொடுத்ததற்கு காரணம் இது தானா என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.