Share via:
தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 14ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மழைநீரை அகற்றியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில் அரபிக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் வருகிற 22ம் தேதியும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதில் அரபிக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இந்தியப்பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்றும், வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது வடமேற்கு திசையை நோக்கி நகர்த்து பின்னர் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கு பெரிய மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.