Share via:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது.
ஆகவே, அவருக்கு ஓய்வு அளிக்கும் எண்ணத்தில் பா.ஜ.க. இருந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்த்தாய்
வாழ்த்து விவகாரத்தில் ஒட்டுமொத்த கட்சிகளின் கோபத்துக்கு ஆர்.என்.ரவி ஆளாகிவிட்டார்.
ஆகவே, அவருக்குப் பதிலாக வி.கே.சிங் நியமனம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இது குறித்து பா.ஜ.க.வினரிடம் கேட்டபோது, ‘’ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை
முடிந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள்
நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக
முதலில் நியமனம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகு, தமிழ்நாட்டுக்கு
மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்து பதவியில் உள்ளார்.
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு
புதிய ஆளுநர் நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஒரு வதந்தியை தி.மு.க.வினரே பரப்பி வருகிறார்கள்.
அதோடு முன்னாள் ராணுவ ஜெனரலும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே. சிங் நியமிக்கப்படலாம்
என்றும் அவர்களே செய்தி பரப்புகிறார்கள்.
விஜய் குமார் சிங் என்ற வி.கே.சிங், ராணுவத்தில் பணியாற்றி பாஜகவில்
இணைந்தவர். மேலும், பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற மூத்த தலைவர்களுடன் நெருக்கமாகப்
பழகியவர். 2021 சட்டசபைத் தேர்தலின் போது, மேலிடத்தின் தமிழக இணைப் பொறுப்பாளராக இருந்தார்.
அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது பாஜக. இதனால் தமிழகத்தில் கூட்டணித் தலைவர்களுக்கும்
நல்ல பரிட்சயமானவர் என்ற அடிப்படையில் அவர் பெயரைக் கூறி வருகிறார்கள்.
ஆனால், தி.முக.வினர் செய்தி பரப்பிவரும் நேரத்தில் அவர்கள் எதிர்பார்க்கும்
மாற்றம் நடக்காது. தி.மு.க.வுக்கு அடி பணிந்து இந்த பிரச்னைக்காக கவர்னரை மாற்றும்
எண்ணம் பா.ஜ.க.வுக்குக் கிடையாது. ஆனால், வேறு ஒரு சமயத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.
கண்டிப்பாக வி.கே.சிங் ஆக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்கிறார்கள்.
பார்க்கலாம்.