Share via:
ஜூலை 1 முதல் அறிமுகமாகியிருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு
நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் அரசும் எடப்பாடி
பழனிசாமியும் இந்த விஷயத்தில் ஒரே நேர்க்கோட்டில் நிற்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக்
கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்
ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கில், ‘இந்தி, சமஸ்கிருதம்
தெரியாத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய
அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்ற அதிகாரம் வழங்குகிறது.’’
என்று கூறியிருக்கிறார்.
இந்த சட்டங்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
‘’இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில்
இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு
உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி
மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும்
கூட,
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின்
பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பாணது
பல மொழிகள் – பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும்
அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை
மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி
மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று
மத்திய அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க.வும் இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும்
6ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என திமுக சட்டத்துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் அமல் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள்
நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும்,
இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றும் வகையிலும் இருப்பதால் இச்சட்டங்களை
ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதனை எதிர்த்து வரும் 6ம் தேதி காலை 10 மணி
முதல் மாலை 6 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்துவது, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை
வழக்கறிஞர்கள் மட்டும் இன்றி, பொது மக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும்
கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது என்றும், இந்த கருத்தரங்கில் கட்சிப் பாகுபாடு இல்லாமல்
அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகம் ஒன்றுபட்டு எதிர்க்கும் நிலையில் மோடி என்ன செய்யப்போகிறார்..?