Share via:
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பாட்டாளி மக்கள்
கட்சி சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து செளம்யா அன்புமணி, மாம்பழம் சின்னத்தில்
வாக்கு சேகரித்த போது பா.ம.க. ஜெயித்துவிட்டால் டாஸ்மாக் மூடப்படும் என்று வித்தியாசமான
ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயிப்பதன் மூலம் எப்படி டாஸ்மாக்கை மூடுவார்கள்
என்பது சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், ‘’தி.மு.க.வினர்
இப்போதே வன்முறை, தேர்தல விதிமீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை தட்டிக் கேட்கும்
பா.ம.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மீது குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்றனர்.
இதை தடுக்க வேண்டிய காவல் துறையும் தேர்தல் அதிகாரியும் அவர்களுக்குத் துணை நிற்கிறார்கள்.
9 அமைச்சர்களும் 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். இவர்கள் மது அருந்தி,
சீட்டு விளையாடி மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.
சட்டவிரோதமாக மணல் எடுத்தது பற்றி புகார் கூறிய அ.தி.மு.க. கிளைச்செயலாளர்
கந்தன் தாக்கப்பட்டுள்ளார். அதோடு விக்கிரவாண்டியில் 15 ஆயிரம் பேர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, தேர்தல் அதிகாரி சந்திரசேகரை அந்த பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்’’
என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
தேர்தல் தோல்விக்கு இப்போதே அன்புமணி காரணம் சொல்லத் தொடங்கிவிட்டனர்
என்று இப்போதே தி.மு.க.வினர் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டனர். அதோடு டாஸ்மாக் மூடுவது
மட்டும் போதாது, விக்கிரவாண்டிக்கு ஏர்போர்ட், ஹார்பர் கொண்டுவருவோம்னு சொல்லுங்க மேடம்
என்று செளம்யாவை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.