Share via:
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சி இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன்
ஆட்சி செய்துவந்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எதிர்க்கட்சித்
தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினரால் பப்பு என்று கிண்டல்
செய்யப்பட்ட ராகுல்காந்தி, நேற்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும்
பா.ஜ.க.வை கிழிகிழியென கிழித்து எறிந்துவிட்டார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
மீது பேசிய ராகுல் காந்தி, ”உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. ஒட்டுமொத்த
இந்துக்களும் பாஜகவோ, மோடியோ அல்ல.சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர்..’’
என்றதும் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் எழுந்துநின்று எதிர்ப்பு
தெரிவித்தனர்.
அப்போது மோடி, “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக்
கொள்ள முடியாது” என்றதும் தொடர்ந்து ராகுல்காந்தியை பேச விடாமல் பாஜக எம்.பி.க்கள்
கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு எழுந்து
பிரதமர் மோடி பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும். ஆனாலும் ராகுல் விடாப்பிடியாக,
‘’இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு பா.ஜ.க. 24 மணி நேரமும் வெறுப்பை பரப்புகிறது, வன்முறையை
விதைக்கிறது. வெறுப்பு, வன்முறை, வெறுப்பு, வன்முறையைத் தொடர்கிறது..’’ என்று ஆவேசம்
கட்டினார்.
அப்போது அமித்ஷா, ’’காங்கிரஸ் ஆட்சியில்தான் டெல்லியில் சீக்கியர்கள்
மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது’’ என்று பேச்சை திசை திருப்ப முனைந்தார். ஆனால்
ராகுல் காந்தி அதை கண்டுகொள்ளாமல், ‘’இந்துக்கள் என்பவர்கள் அமைதியை விரும்புவர்கள்,
வன்முறையில் ஈடுபடாதவர்கள்; ஆனால் பாஜகவினர் அதற்கு நேர்மாறாக உள்ளனர். இந்து மதம்
வெறுப்பை போதிக்கவில்லை; ஆனால் பாஜக 24 மணி நேரமும் வெறுப்பையே பரப்பி வருகிறது. அயோத்தி
பற்றி பேசியவுடன் மைக் ஏன் அணைக்கப்பட்டது ஏன்?. ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு
மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதானி, அம்பானிக்கு
அழைப்பு; ஆனால் அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை.
அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள், ராமர் கோயில் விழாவுக்கு
அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டன.
மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. வாரணாசிக்கு
பதில் பைசாபாத்தில் போட்டியிட்டிருந்தால் மோடி தோற்றிருப்பார். அவைக்கு வரும்போது என்னைப்
பார்த்து மோடி சிரிப்பது கூட இல்லை. மோடிக்கு பயந்து பாஜகவினர் எனக்கு வணக்கம் கூட
வைப்பதில்லை,” என்று தெரிவித்தார்.
மேலும், ‘’அக்னிபாத் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால் அதை வீரமரணமாக
ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. அக்னிவீர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால் அதை
வீரமரணமாக பாஜக அரசு ஏற்காது. அக்னிபாத் திட்டம் என்பது ராணுவ வீரர்களுக்கானது அல்ல;
பிரதமர் மோடியின் மூளையில் உதித்த திட்டம். அக்னிபாத் திட்டத்தை உருவாக்கியது ராணுவம்
அல்ல; பிரதமர் மோடி தான். அக்னிபாத் திட்டமே யூஸ் அன் த்ரோ போல உள்ளது,” எனத் தெரிவித்தார்.
ராகுலின் பேச்சுக்கு நடுவே குறுக்கிட்ட ராஜ்நாத் சிங், “அவையில்
தவறான தகவல்களை காங்கிரஸ் சொல்கிறது,”என குறிப்பிட்டார். மேலும் அக்னி வீரர்களிடம்
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித்ஷா எதிர்ப்பு தெறிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ”,மணிப்பூரில் உள்நாட்டு போர்
நடைபெற்று வருகிறது. ஆனாலும் பிரதமர் மணிப்பூர் செல்ல மாட்டார். மணிப்பூர் இந்தியாவின்
ஒரு பகுதி இல்லையா? பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை? ஒன்றிய அரசின் கொள்கைகளால் மணிப்பூர்
மாநிலத்தில் வன்முறை நீடித்து வருகிறது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரை
மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. கடவுளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக கூறியவர் மோடிதான்;
நான் கூறவில்லை. மும்பை விமான நிலையத்தை அதானிக்கு கொடு என கடவுள் கூறியதால் மோடி செய்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார் மோடி. பணமதிப்பிழப்பால்
தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டதால்
வேலைவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக
தோற்கடிக்கப்படும்.’’ என்றார்.
அதோடு, ‘’நீட் தேர்வு பணக்காரர்களுக்கான தேர்வு முறையாக மாறிவிட்டது.
இதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது’’ என்று ஆவேசம் காட்டினார். இவரையடுத்து
பேசிய திருணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மொய்த்ரா, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஆகியோரும்
பா.ஜ.க.வை கடுமையாகத் தாக்கினார்கள்.
இந்த நிலையில், இந்துக்கள் குறித்து ராகுல் பேசிய பேச்சுக்கள்,
அக்னிபாத் மற்றும் நீட் தேர்வு குறித்து பேசியவை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை அறிந்துகொள்ள
இந்தியா ஆர்வமாகக் காத்திருக்கிறது.