Share via:
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள்
உறுதிமொழி கொடுத்து பதவி ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் நிறைய பேர், ‘உதயநிதி வாழ்க,
உதயநிதிக்கு வணக்கம்’ என்று பவ்யம் காட்டினார்கள். இந்த அடிமைத்தனமே திராவிட மாடலா
என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘’நாடாளுமன்ற தமிழக உறுப்பினர்கள்
பதவியேற்ப்பில் தொடர்பில்லாத பிரச்சனைகளை முன்வைத்து தங்களுடைய விசுவாசங்களை காட்டியது
அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, தவறான நடைமுறையாகும். திமுக எம்பிக்கள் ஒவ்வொருவரும்
தவறாமல் தளபதி வாழ்க! என்று சொல்வதோடு “தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி”
என்று சொல்லத் தவறவே இல்லை.
அதைக் கடந்து யாரெல்லாம் தங்களுக்கு அரசியலில் பின்புலமாக இருந்தார்கள்
என்பதை பொதுவெளியில் ஒரு அரசியல் சாசனத்தை வழிநடத்துகிற அவையில் எ.வ. வேலு வாழ்க! இவர்
வாழ்க! அவர் வாழ்க! கே கே எஸ் எஸ் ஆர் வாழ்க! கனிமொழி வாழ்க! என்றெல்லாம் அடிமையாக
துதி பாடியது எந்த விதத்திலும் அரசியல் நாகரீகம் அல்ல.
இந்தப் போக்குகள் கண்டிக்கப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டும்.
காரணம் இவர்கள் எதற்காக பொறுப்பேற்க வந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிவிட்டு
வேறு எதையும் பேசாமல் இவர்களுடைய உரைகளிலும் இதே போல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும்
புராணம் பாடுவது கேட்பதற்கு புளித்துப் போய்விட்டது.
இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையை பேச வந்த மந்திரி
எ.வ. வேலு அவர்கள் புறநானூற்று பாடல் ஒன்றைச் சொல்லி புறநானூற்றில் போருக்குச் சென்ற
அந்த மகனைப் போல உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று அவருக்கு வெண்சாமரம் வீசுகிறார்.
இதெல்லாம் வெளிப்படையான ஒப்பந்தங்கள் என்று’’ என்று கூறியிருக்கிறார்.
நேற்று முளைத்த காளான் காலில் விழும் அடிமைகள் என்று தி.மு.க.
எம்.பிக்கள் அத்தனை பேரையும் அ.தி.மு.க.வினர் கடுமையாக கிண்டல் செய்துவருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் தி.மு.க.வினர், ‘’ஜெயலலிதாவின் கார் டயரை விழுந்து கும்பிட்டவர்கள்
திராவிட மாடல் பற்றி எங்களுக்கு எதுவும் கற்றுத்தரத் தேவையில்லை.
உதயநிதி சனாதனக் கொள்கை பற்றி பேசியபோது, இந்தியா முழுக்க அவரை
கடுமையாக கண்டனம் செய்தார்கள். அதற்கு பழி தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்பாகவே எம்.பி.க்கள்
இதை பயன்படுத்திக்கொண்டார்கள்’’’ என்கிறார்கள்.
எப்படியோ நாடாளுமன்றத்திலும் உதயநிதி ஜால்ரா டீம் ஒன்று உருவாகிவிட்டது.