Share via:
பகுஜன் சமாஜவாதியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட
விவகாரம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. அவரது உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில்,
அவரது ஆதரவாளர்கள் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்ற வேண்டும், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம், மறியலில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர்
ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு
முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி
பாரதம் கட்சியில் இணைந்தார். பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து
விலகி தனித்து செயல்பட்டு வந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில்
சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006ல் மேயர் மா.சு தலைமையில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 99
பேர் ராஜினாமா செய்த போது சுயேட்சை உறுப்பினரான ஆர்ம்ஸ்ட்ராங் ராஜினாமா செய்ய மறுத்ததால்
முதன்முதலில் செய்திகளில் இடம் பெற்றார். முதலமைச்சர் கலைஞரின் உத்தரவை மீறிய தலித்
இளைஞன் என்ற செய்தியைப் பார்த்த மாயாவதி உடனே அவரை அழைத்து பகுஜன் சமாஜ் கட்சியின்
மாநில தலைவர் பொறுப்பு வழங்கினார்.
கடந்த 2008-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ்
கட்சி (பிஎஸ்பி) தலைவருமான மாயாவதியை அதே ஆண்டு டிசம்பர்22-ம் தேதி சென்னை அழைத்து
வந்து மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தி அக்கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றார்.
அதுவரை வடதமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம்
என்று மட்டுமே இருந்த பட்டியலின மக்கள் ஆதரவை மாற்றி, தானும் ஒரு கட்சித் தலைவராக மாறினார்.
கணிசமான ரவுடிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஒரு அரசியல் தாதாவாகவும் உருவெடுத்தார்
ஆர்ம்ஸ்ட்ராங்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு.க.ஸ்டாலினை
எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும்
பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார்.
அரசியல் மற்றும் தொழில் முறை எதிரிகளை நிறைய சம்பாதித்திருந்த
ஆம்ஸ்ட்ராங் மிகவும் பாதுகாப்புடன் இருந்தவர். அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி
நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவரை
மட்டும்தான் பார்ப்பார். தன்னை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாதவாறு கட்டமைப்பை
ஏற்படுத்தி வைத்திருந்தார். ஏரியா மக்களுக்கு தாதா போல் செயல்பட்டு வந்தார்.அதனால்
சுயேட்சையாக வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.
சட்டக் கல்லூரி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்
பெயர் பல்வேறு கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து பிரச்சனைகளில் அடிபட்டது. அவரது கூட்டாளியான
வக்கீல் ரஜினிகாந்த் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் மற்றும் தொழில்
போட்டியாளர்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது.
இதனால், அவர் பெரும்பாலும் வெளியே வருவதை குறைத்துக் கொண்டார். மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு
மட்டுமே ஆதரவாளர்கள் புடைசூழ சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டினருகே தனது நண்பர்கள்
சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு இரு சக்கர வாகனங்களில் கத்தி,
அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல், மின்னல் வேகத்தில் ஆக்ரோஷமாக
கத்திக்கொண்டே சுற்றிவளைத்து அவரை சரமாரியாக வெட்டியது.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றும் ஆம்ஸ்ட்ராங்கால் முடியவில்லை.
இந்ததாக்குதலில் நிலை குலைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைக் கண்டு
அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர் உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு
ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய காவல்ஆணையர்
சந்தீப் ராய் ரத்தோர்,கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி,
வட சென்னை இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் செம்பியம் காவல் நிலைய போலீஸார்
10 தனிப்படை அமைக்கப்பட்டது.
இது குறித்து பேசிய அஸ்ரா கார்க், ‘’இந்த கொலையில் சரண் அடைந்திருக்கும்
8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று
தெரிவித்தார். அருள் (33), செல்வராஜ் (48), மணிவண்ணன் (25), திருமலா (45), பொன்னை பாலு
(39), ராமு (38), சந்தோஷ் (32), திருவேங்கடம் (33), ஆகிய 8 பேரிடம் கைது செய்து கொலைக்கான
காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட
விசாரணையில் ஏற்கெனவே கடந்தாண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை தனிப்படை
போலீஸார் முடிக்கி விட்டுள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடம் அதை சுற்றிப் பதிவாகி
இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும் மீதமுள்ள தலைமறைவாக உள்ள
ரவுடிகளையும் அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்களையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து
தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்குப் பிரேத பரிசோதனை முடிவடைந்திருக்கும் நிலையில்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை சுற்றி ஆதரவாளர்கள், ‘’சி.பி.ஐ. விசாரணை வேண்டும்,
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செலுத்தவரும்
நேரத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரசு சார்பில் காவல் துறை மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இது
முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்று கருதப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில்
சம்பந்தப்பட்டவர்களை என்கவுண்டர் செய்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள்
இருப்பதைக் காட்ட முடியும் என்று போலீஸ் கடுமையான தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.