Share via:
சட்டமன்றக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து
விவாதம் நடத்துவதற்கு எடப்பாடியின் அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி,
இன்றும் வெளிநடப்பு செய்தார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு
கொடுக்க வேண்டிய ஹோம்பிசோல் விஷமுறிவு மருந்து ஏற்பாடு செய்யவில்லை என்பதாலே இத்தனை
மரணங்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். ஆனால், தி.மு.க.வின் அமைச்சரோ, ‘ஒமிபிரசோல்’
மாத்திரை இருப்பதாகக் கூறுகிறார். இது அல்சருக்குத் தரப்படும் மாத்திரை.
இப்படி உண்மையை மறைக்கிறது தி.மு.க. அரசு. 183 பேர் பாதிக்கப்பட்டு
இருப்பதாகவும் 55 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது.
இன்னமும் 28 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதைத் தான் நாங்கள் கேள்வி
கேட்கிறோம்.
உண்மையில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை அரசு வெளியிட
வேண்டும். இந்த கள்ளச்சாராய விற்பனையில் தி.மு.க.வினருக்கும் தொடர்பு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி.
விசாரணையில் உண்மைகள் வெளிவராது என்பதாலே சி.பி.ஐ. விசாரணை கோரியிருக்கிறோம்.
மக்களுக்கு முக்கியமான பிரச்னை இது தான். ஆனால், இதை விவாதம் செய்வதற்கு
அனுமதி மறுக்கிறார்கள். எங்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்கள் கருத்தை மட்டும் பதிவு
செய்கிறார்கள்’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வெளிநடப்பு குறித்து பேசியிருக்கும்
சபாநாயகர், ‘’அ.தி.மு.க.வினர் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால் மக்கள் பிரச்னை
பற்றி பேசுவதையும் புறக்கணிக்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.