Share via:
நடிகர் விஜய் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி
மரணங்கள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு மக்களுக்கு உதவி செய்யுமாறு
கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து 2026 தேர்தலுக்கு
அச்சாரம் போட்டுள்ளார் சீமான்.
விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து
வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின்
படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக
போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை உன்னிட்டு GOAT படத்திலிருந்து
இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது.
இப்பாடலையும் விஜய்யே பாடியிருக்கிறார். மேலும் GOAT படத்தின்
கிலிம்ப்ஸ் வீடியோவும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் சீமான், ‘’தமிழ்த்திரையுலகில்
தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும்
தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள்
முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின்
மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு,
எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய்
ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக
அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள,
எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி
விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!’’ என்று கூறியிருக்கிறார்.
இது கூட்டணிக்கு அச்சாரம் என்று கருதுகிறார்கள். இந்த நிலையில்
விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரத் பெயரை சொல்வதற்கு விரும்பாமல், ‘தளபதி பெயர்
கொண்டவர்’ என்று பவ்யம் காட்டிவரும் நிலையில், சீமான் எப்படி விஜய் என்று சொல்லலாம்
என்று சண்டைக்குப் போகாமல் இருந்தால் சரிதான்.