News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்.

கடந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். கடந்த ஆண்டு இவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும் அதற்கு மாஜி அமைச்சர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ‘2016-2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 11 பேருக்கு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காக அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும், அதற்கு மாஜி அமைச்சர் அன்பழகனே காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி கவிதா, காரியமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். இவரது கணவரான கிருஷ்ணமூர்த்தி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேளையானூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். அதோடு தர்மபுரி அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவராகவும் இருந்தார்.

இவர் மாமியார் வீட்டிலிருந்து டூவீலரில் தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிர் இழந்துவிட்டார். இந்த மரணத்தில் மாஜி அமைச்சர் அன்பழகன் மீது சந்தேகம் இருப்பதாக கவிதா புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், ‘விபத்தில் உயிர் இழந்ததாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் பட்டிருக்கிறார். வண்டிக்கு எந்த அடியும் படவில்லை. கணவரின் தலை மட்டும் பிளக்கப்பட்டுள்ளது. மாஜி அமைச்சரின் சொத்துக்குவிப்பு வழக்கில் இவரும் இருக்கிறார் என்பது தான் சந்தேகம் தருகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு அன்பழகனின் மருமகள் பூர்ணிமாவின் மரணமும் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக புகார் எழுந்தது. அதாவது அன்பழகனின் இளைய மகன் சசிமோகனின் மனைவி பூர்ணிமா புஜை அறையில் விளக்கு ஏற்றிய நேரத்தில் ஆடையில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்பட்டது. பூர்ணிமா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பழகன் சொத்துக்குவிப்பு ரெய்டில் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு முக்கிய காரணம். ஆகவே, அவரை கொலை செய்துவிட்டால் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்பதாலே திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக கவிதா மாஜி அமைச்சர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

போலீஸார் விசாரணையைத் தொடங்கினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள். விசாரணை தொடங்கட்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link